By Abdul Rahman Peer Mohamed
Rating: 3.5/5 நடிகர்கள்: சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், யோகி பாபு, மிஷ்கின், சரிதா, சுனில் இயக்கம்: மடோன் அஸ்வின் இசை: பரத் சங்கர் தயாரிப்பு: அருண் விஸ்வா ரன்னிங் டைம்: 2 மணி நேரம் 25 நிமிடம் சென்னை: சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், யோகி பாபு, மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்துள்ள 'மாவீரன்' இன்று வெளியானது.
மடோன் அஸ்வின் இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது. மாவீரனுக்காக விஜய்சேதுபதி வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தது. இந்நிலையில், மாவீரன் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு கம்பேக் கொடுத்துள்ளதா என்பதை இப்போது பார்க்கலாம்.
சிவகார்த்திகேயனின் மாவீரன் விமர்சனம்:மக்களுக்காக மாவீரனாக மாறும் ஒரு கோழை ஹீரோவின் கதை தான் மாவீரன். தமிழ் சினிமாவில் ஏற்கனவே பார்த்து பழகிய இந்த ஒருவரிக் கதையை, வித்தியாசப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது சிவகார்த்திகேயன் - மடோன் அஸ்வின் காம்போ. சீரியஸ்ஸான சமூகப் பிரச்சினை, அதன் பின்னணியில் இருக்கும் அரசியல், இந்த இரண்டையும் காமெடி ப்ளஸ் ஆக்ஷனுடன் பக்கா கமர்சியல் காக்டெய்லாக கலந்துக்கட்டி உருவாகியுள்ளது மாவீரன். திறமையான காமிக்ஸ் ஆர்ட்டிஸ்ட் சத்யா என்ற கேரக்டரில் சிவகார்த்திகேயன், மாவீரனின் கதைகளை காமிக்ஸ் ஸ்டோரியாக கிரியேட் செய்து, சீனியர் ஜார்னலிஸ்ட் ஒருவரிடம் கொடுத்து வாய்ப்புத் தேடுகிறார். ஆனால், அவரோ அதில் சிவகார்த்திகேயனின் பெயருக்குப் பதிலாக தனது பெயரைப் போட்டுக்கொண்டு ஏமாற்றி வருகிறார். இதனை தெரிந்துகொண்ட நாயகி நிலா (அதிதி ஷங்கர்) சிவகார்த்திகேயனுக்கு உதவி செய்து அதே பத்திரிகை அலுவலகத்தில் அவருக்கு வேலை வாங்கிக் கொடுக்கிறார்.
இன்னொருபக்கம் நதிக்கரையில் வாழும் மக்கள் அனைவரும் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட புதிய குடியிருப்புக்கு மாற்றப்படுகின்றனர். அதில் ஹீரோ சிவகார்த்திகேயனின் குடும்பமும் ஒன்று. ஆனால், அடிப்படை வசதிகள் கூட இல்லாத அந்தக் குடியிருப்பில் வசிக்க முடியாமல் மக்கள் அனைவரும் பல பிரச்சினைகளை சந்திக்கின்றனர். இதையெல்லாம் தட்டிக் கேட்காமல் அட்ஜெஸ்ட் செய்து வாழ்ந்துவிடலாம் என கோழையாக ஓடி ஒளிகிறார் சிவகார்த்திகேயன்.
ஒருகட்டத்தில் கோழை ஹீரோ, மாவீரனாக மாறுவதும், அதன் பின்னர் வில்லனையும் அவனது ஆட்களையும் புரட்டி எடுப்பதும் எப்படி என விவரிக்கிறது திரைக்கதை. மக்களுக்காக போராடி தனது உயிரைகொடுத்த அப்பா போல் தானும் ஆகிவிடக் கூடாது என அஞ்சி நடுங்கும் சிவகார்த்திகேயன், இறுதியில் தனது உயிரே போனாலும் பரவாயில்லை என துணிந்து நிற்கிறார். இதற்கெல்லாம் காரணம் அவருக்கு மட்டுமே கேட்கும் ஒரு மாயக் குரல். 'வீரமே ஜெயம்' என்ற இந்த ஒற்றை வரியோடு நின்றுவிடாமல், படம் முழுக்க சிவகார்த்திகேயனை துரத்தும் அந்த குரல் தான் நிஜமான மாவீரன். அரசியல் அதிகாரத்தால் எளிய மக்களின் வாழ்வாதாரம் எப்படி பந்தாடப்படுகிறது என்ற அட்டாகசமான பின்னணியை கையில் எடுத்த இயக்குநர், அதுகுறித்து முழுமையாக பேசாமல் படத்தை ஹீரோ மெட்டீரியலாக மாற்றிவிட்டார். படம் தொடங்கியது முதலே சரியாக நூல்பிடித்ததைப் போல கச்சிதமாக நகர்கிறது திரைக்கதை. குறிப்பாக இன்டர்வெல் பிளாக் சிவகார்த்திகேயனுக்கு செம்ம மாஸ் கொடுத்துள்ளது. ஆனால், இந்த ஃபயர் இரண்டாம் பாதியில் எடுபடாமல் போனது துரதிர்ஷ்டம். கோழையாக எல்லாவற்றுக்கும் அஞ்சி நடுங்கும் சிவகார்த்திகேயன், குரல் கேட்டதும் மேலே பார்க்கிறார், அடுத்த நொடியே ஆக்ஷனில் அதகளம் செய்கிறார். தனது அப்பாவித்தனமான முகத்தை வைத்துக்கொண்டு, திடீரென ஆக்ஷன் ஹீரோவாக மிரட்டுவதில் அதிரிபுதிரியான ட்ரான்ஸ்ஃபர்மேஷன் எனலாம்.
டான், பிரின்ஸ் போன்ற படங்களில் மொக்கையான கேரக்டரில் நடித்து பல்பு வாங்கிய சிவகார்த்திகேயனுக்கு, மாவீரன் சத்யா ரோல் லைஃப் டைம் செட்டில்மெண்ட். அம்மாவிடம் பாசத்தில் குழைவது, யோகி பாபுவுடன் காமெடியில் அதகளம் செய்வது, மிஷ்கின், சுனில் ஆகியோரிடம் மாட்டிக்கொண்டு உயிருக்குப் பயந்து கெஞ்சுவது என தரமாக கம்பேக் கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் தனி காமெடி ட்ராக்கில் கதையுள்ளே வரும் யோகிபாபு, அதன்பின் சிவாவுடன் சேர்ந்து தனது அக்மார்க் காமெடியை அளவில்லாமல் கொடுத்துள்ளார். சிவகார்த்திகேயன் - யோகிபாபு காமெடி தான் முதல் பாதியின் மிகப் பெரிய பலம். ஆனால், இரண்டாம் பாதியில் இது சுத்தமாக எடுபடவில்லை. வழக்கம்போல ஹீரோவுக்கு பூஸ்ட் அப் கொடுக்கும் பார்த்துப் பழகிய நாயகியாக அதிதி ஷங்கர். அடிக்கடி வந்து "உன்னால முடியும் பாஸ்கர்" என்பதாக ஹீரோவுக்கு வெறியேத்திவிட்டு ஆள் காணாமல் போய்விடுகிறார். ஜெயக்கொடி என்ற வில்லன் கேரக்டரில் மிஷ்கின் மிரட்டுகிறார் என்றால், சைலண்டாக வந்து அவருக்கே டஃப் கொடுக்கிறார் 'புஷ்பா' சுனில். இவர்கள் தவிர பாசமான அம்மாவாக சரிதா, ஜூனியர் வில்லனாக 'அயலி' மதன் ஆகியோர் கவனம் ஈர்க்கின்றனர்.
மாவீரன் படத்தின் இன்னொரு பெரிய ப்ளஸ், பரத் சங்கரின் பின்னணி இசை. காமெடி, சென்டிமெண்ட், ஆக்ஷன் என ஒவ்வொரு காட்சிக்கும் வெரைட்டியாக BGM போட்டு கூஸ்பம்ப் நிகழ்த்துகிறார். சீன் ஆ சீன் ஆ, வண்ணாரப்பேட்டை பாடல்கள் கேட்க இதமாக இருந்தாலும், படத்துடன் ஒட்டவேயில்லை. விது அய்யனாவின் ஒளிப்பதிவு, பிலோமின் ராஜ்ஜின் எடிட்டிங் மாவீரனுக்கு இன்னொரு பெரிய பலம். இயக்குநர் மடோன் அஸ்வினின் முதல் படமான மண்டேலாவில் வசனங்கள் கவனம் ஈர்த்த அளவிற்கு, மாவீரன் பட வசனங்கள் ஸ்ருதி சேர்க்கவில்லை. இவர்களுக்கு சவால் விடுகிறார் வாய்ஸ் ஓவர் விஜய் சேதுபதி. திரையில் வராமல் வாய்ஸ் ஓவரிலேயே மாவீரன் படத்தை பாதி சுமந்துள்ளார் என்றால் அது மிகையில்லை. க்ளைமேக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயனுக்கு ஹீரோயிசம் தேவை என சில தேவையில்லாத காட்சிகளை வைத்து நோகடித்துவிட்டார் இயக்குநர். அதுவும் கூட பல படங்களில் பார்த்துப் பழகிய அதே மொக்கத்தனமாக க்ளைமாக்ஸ் தான். கடைசியாக மாவீரன் மீண்டும் வரலாம், அதாவது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகலாம் என சின்னதாக லீட் கொடுத்து முடித்துள்ளார் இயக்குநர். ஒட்டுமொத்தமாக ரஜினியின் ஜெயிலர் வெளியாகும் வரை, சிவகார்த்திகேயனின் மாவீரன் தான் வசூலில் மன்னன் என உறுதியாகக் கூறலாம். முதல் வாரம் நல்ல ஓப்பனிங் கிடைத்துவிட்டால், சிவகார்த்திகேயனின் கேரியரில் இன்னொரு 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கன்ஃபார்ம்.
Read more at: https://tamil.filmibeat.com/reviews/maaveeran-movie-review-in-tamil-actor-sivakarthikeyan-political-thriller-worked-out-or-not-110692.html
http://dlvr.it/SsCVZR
No comments:
Post a Comment